உலகளாவிய ரீதியில் புகையிலையின் பயன்பாடு வீழ்ச்சியடைந்தாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
2000 ஆம் ஆண்டு மூன்றில் ஒருவர் புகைப்பிடிப்பவராக இருந்த நிலையில் தற்போது குறித்த தொகையானது ஐந்தில் ஒருவராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் புகையிலை கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் மனநிறைவு அடையும் வகையில் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் ரூடி கேர் க்ரேஷ் தெரிவித்துள்ளார். புகையிலைத் தொழில் எண்ணற்ற உயிர்களை பலிகொடுத்து இலாபத்தை ஈட்டுவதை கண்டு தாம் வியப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், 2000 ஆம் ஆண்டில் 1.36 பில்லியனாக இருந்த 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பாவனையாளர்கள் தற்போது 1.25 பில்லியனாக குறைவடைந் துள்ளது எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதன்படி 2030 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை அதிகரிக்கப்படுகின்ற போதிலும் புகையிலை பயன்படுத்துவோர் தொகை 1.2 பில்லியனாக குறைவடையும் என ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகைப்பிடிப்போர் அதிகம் காணப்படுவதாகவும் சனத் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் புகைத்தல் பழக்கம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எகிப்து, ஜோர்தான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் புகையிலை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் உலகளாவிய ரீதியில் சுமார் 362 மில்லியன் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.