ரணிலின் ஆட்சியில் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்கிறது – இம்ரான் எம்.பி சாடல்..!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ் சாட்டியுள்ளார். சமீபத்தில்  இடம்பெற்ற கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர் மாற்றத்தின் மூலம் இது உறுதிப் படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுக்களின் செயலாளர்களுள் இருவர் முஸ்லிம் உத்தியோகத்தர்களாகவும், இருவர் தமிழ் உத்தியோகத்தர்களாகவும், ஒருவர் சிங்கள உத்தியோகத்தராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். கிழக்கு மாகாண இனச்சமநிலையைக் கருத்தில் கொண்டு இந்த நியமனம் இடம் பெற்றிருந்தது. 

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர் நியமனத்தில் தகுதியுள்ளோர் இருந்தும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இரு முஸ்லிம் செயலாளர்கள் பணியாற்ற வேண்டிய தருணத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் மாத்திரம் ஒரு முஸ்லிம் உத்தியோகத்தர் செயலாளராகப் பணியாற்றினார்.

சமீபத்தில் அவரும் காரணமேதுமின்றி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். தற்போது கிழக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களிலும் எந்த ஒரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர் இல்லை. 

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுச்சேவை ஆணைக்குழு, வீடமைப்பு அதிகாரசபை, சுற்றுலா அதிகார சபை, போக்குவரத்து அதிகாரசபை,  முன்பள்ளிப் பணியகம், கூட்டுறவு ஆணைக்குழு ஆகியவற்றின் தவிசாளர்களுள் சிலவற்றுக்கு முஸ்லிம் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் இவற்றில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளர்களும் நியமிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டனர். இது குறித்து ஏற்கனவே நான் சுட்டிக்காட்யுள்ளேன்.

தற்போது அந்த வரிசையில் அமைச்சுச் செயலாளர்கள் பதவியிலிருந்தும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அகற்றப் பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் விரோதப்  போக்குடன் செயற்பட்டு வருகின்றது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். 

இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் கிழக்கு மாகாணமாகும் இந்த மாகாணத்திலேயே முஸ்லிம்களுக்கு இந்த நிலையென்றால் ஏனைய மாகாண முஸ்லிம்களும் இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தொடர்ந்து பதவியில் நீடித்து இருப்பாராயின் சகல முஸ்லிம்களும் ஓரங்கட்டப்பட்டு விடுவர் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

கிழக்கு மாகாண நிர்வாகத்தில் இப்படிப் பல முஸ்லிம் விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் முஸ்லிம்களின் உரிமைகளை வென்று தருவோம் என்று கோசம் எழுப்பி வாக்குப் பெற்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனமாக இருப்பது எனக்கு கவலையைத் தருகின்றது. இது முஸ்லிம்களது உரிமை சார்ந்த விடயம் இல்லiயா என்று கேட்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *