சுகாதார அமைச்சருக்கு சார்பாக கைகளை உயர்த்திய 113 பேரும் தைரியம் இருந்தால் பொறுப்புக்குக்கூறுங்கள் – சஜித் காட்டம்..!samugammedia

வங்குரோத்தான நாட்டில், தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர், மனித இம்யூனோகுளோபின் என்ற அத்தியாவசிய மருந்தில் பல்வேறு கலவைகளை கலந்து தரம் குறைந்த,தரமற்ற மருந்துகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். அமைச்சரும் அதிகாரிகளும் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி மோசடி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு தரக்குறைவான மருந்துகளை வழங்கியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வேறு பல மருந்துப் பாவனைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் தரக்குறைவான மருந்தினால் கண்பார்வை இழந்தவர்கள் அதிகளவானோர் உள்ளனர். வங்குரோத்தால் கடனை செலுத்த முடியாமல், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மூழ்கியுள்ள நாட்டில் கூட மருந்துப் பொருட்களைத் திருடுவது பெரும் குற்றச் செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 79 ஆவது கட்டமாக, அம்பலாங்கொடை,படபொல ஸ்ரீ கல்யாணதிஸ்ஸ கல்லூரி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மருந்துப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு கூறப்படும் போது, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்புக்கள் இருந்ததால் சமூகமளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தும், அந்நபர் அது போன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ளவில்லை. இந்நபர்கள் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு பல தவறுகளை செய்தவர்கள் இன்றும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர். இந்த தரக்குறைவான மருந்து மோசடிக்கு சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் சார்பாக கைகளை உயர்த்திய 113 பேரும் பொறுப்புக் கூற வேண்டும். இத்தைய நபர்கள் அமைச்சரவையில் இருக்கும் போது சுகாதாரத்துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *