தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே, நாங்கள் தமிழரசுக் கட்சியின் தனிச் சின்னத்தில் நாங்கள் பயணித்தோம். பல வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பயணித்தோம்.
உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர்கள் வெளியில் சென்றதன் காரணமாக நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்ற காரணத்தினால் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றோம்.
எங்களை பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் பொதுச் சின்னம் ஒன்றில் பயணிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஒரு பொதுச் சின்னத்தில் நாங்கள் அனைவரும் அணிதிரள்வோம்.
பொதுச்சின்னத்திற்கு வீட்டுச் சின்னம் கூட மாற்றப்பட்டால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.தனிப்பட்ட கட்சிக்குள் கூட்டாக இருப்பது நன்றாக அமையாது. பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.