பல்கலை மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் – சட்டத்தரணி சுகாஸ் காட்டம்..!samugammedia

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தாக்கப்பட்டமை என்பவற்றை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்றையதினம்(05) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய சுதந்திர தினம் தமிழர்களை பொறுத்தவரையில் கரிநாள் என்பதை வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் மக்களின் போராட்டங்களும் எதிர்ப்பு அலைகளும் நடைபெற்றிருந்தது.

இதனை அடக்குவதற்காக இலங்கையின் அரச இயந்திரமான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சகல பலப்பிரயோகத்தினையும் மேற்கொண்டமையை அவதானிக்க முடிகின்றது.

இது வன்முறையின் உச்சக்கட்டம். ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடு. தமிழ் மக்களை குறைந்த பட்சம் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு கூட எந்தவகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதை இலங்கை அரசும் அரச இயந்திரமான பொலிஸாரும் இராணுவத்தினரும் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை அம்பாறையில் இடம்பெற்ற போராட்டத்திற்கு வருகை தந்த மக்கள் பயணித்தபேருந்துகளை வழிமறித்த பொலிஸார் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த மக்களும் பேருந்து சாரதிகளும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சியிலே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக் கழக மாணவர்கள் படுமோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தாக்கப்பட்டிருந்தார்.

இவற்றை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார். அப்பாவிகளான தங்கள் கருத்துக்களை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்திக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவை அனைத்துமே ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply