கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் -சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு..!samugammedia

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. 

கடந்த 5 ஆம் திகதி போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக வட்டுக்கோட்டை காவல்துறையினரால் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டார். காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்தியப் அலுவலகத்தில் முறைப்பாடளித்தப் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது குறித்த மாணவன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியிருந்தது. இந்த நிலையில், மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கட்டளையை வழங்கியுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் குறித்த மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் நேற்றையதினம் அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது, சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் குறித்த மாணவனை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.

சந்தேகநபர் பல்கலைக்கழக மாணவர் என்பதால் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பாமல் தொடர்ச்சியாக கண்காணிக்குமாறும், உளநல ஆலோசனைகளை வழங்குமாறு சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு மல்லாகம் நீதவான்  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *