எதிர்கால தேர்தல் இலக்கு நோக்கியதாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரை காணப்படுவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வின் கொள்கை விளக்க உரையானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் எதிர்கால தேர்தல் இலக்கு நோக்கியதாகவே அமைந்துள்ளது.
உண்மையாக வார்த்தைகளால் சோடிக்கப்பட்ட உரையாகவும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்கான நோக்கிலும் அரசியல் தீர்வு விடயத்தை உச்சரித்தால் தேர்தல் இலக்கு பாதிக்கப்பட்டுவிடும் என்ற ஜனாதிபதியின் மனநிலையும் உரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வீழ்ந்து போன பொருளாதாரத்தை மீண்டெழச் செய்ய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இல்லாமல் சாத்தியம் இல்லை என்ற உண்மை தெரிந்தும் அதனை மறைத்து அரசியல் தீர்வு தொடர்பாக பேசினால் தென்னிலங்கையில் சலசலப்புக்கள் ஏற்பட்டு தனது வாக்கு வங்கியை சரித்து விடும் என்பதால் நடைமுறைச் சாத்தியமற்ற பொருளாதார வளர்ச்சி பற்றி உரையாற்றியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட சகல தரப்பினரும் தேர்தலையே பிரதான இலக்காக கொண்டு தமது அறிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உரை ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்ததாகவே அமைந்துள்ளதாக சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.