மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 28 ஆண்டு நினைவு தினம் குமாரபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூறப்பட்டது.
இந்நிகழ்வை குமாரபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது முதலில் குமாரபுரம் பிள்ளையார் ஆலயத்தில் பூஜை இடம்பெற்றது.
இதன் பின்னர் குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
பின்னர் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டன.
இக் கொடூர சம்பவத்தில் வயோதிபர்கள், சிறுவர்கள் என 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க தவத்திரு வேலன் சுவாமிகள், திரு மூலர் தம்பிரான் அடிகளார், வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது குமாரபுரம் கிராம மக்களினால் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.