ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து திட்டங்களையும் யோசனைகளையும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்காது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும், அவர் மேற்கொள்ளும் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளை கருத்தில் கொண்டு நாம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தோம்.
எமது தீர்மானம் சரி என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் இலங்கையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
எனினும், இதன் காரணமாக அவர் கூறும் அனைத்தையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாத சில திட்டங்களையும் ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.