மலையகத்தில் வீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் மனோ கணேசனுக்கு மன உளைச்சல்…! கனகராஜ் காட்டம்…!

நீண்ட நாட்களாக இழுபறியிருந்த இந்திய அரசின் நிதி உதவியோடு மலையகத்தில் அமைக்கப்பட இருக்கின்ற வீட்டுத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம் மலையகப்பகுதியில் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.  மலையக மக்களின் வாழ்வாதார கல்வி , குடியிருப்பு,பொருளாதார மேம்பாட்டு  வேலை திட்டங்கள் இதில் உள்ளடங்கும். 

ஆனால், இத்திட்டங்களை பயன்படுத்தி அதை அரசியலாகி அதில் லாபம் தேடி சுவை கண்டவர்களுக்கு  தமது அரசியல் எதிர்காலம் குறித்து கிளி கொள்ளச் செய்துள்ளது. இதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தடுமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளார்.

நல்லாட்சி காலத்துக்கு முன்பே மலையக மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான முடிவை இந்திய மத்திய அரசு எடுத்திருந்தது. அதற்கான பூர்வாங்க வேலைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருந்தது. அதன் அடிப்படையிலேயே நாலாயிரம் வீடுகளை முதற்கட்டமாக வழங்குவதற்கு இந்திய அரசு முடிவெடுத்து அதை அமல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே பத்தாயிரம் வீட்டு திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலையக விஜயத்தின்போது அறிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கான பத்தாயிரம் வீட்டு திட்டத்தை அறிவித்தபோது மலையக மக்களின் குடியிருப்பு தேவை கருதி இந்திய அரசால் நன்கொடையாக வீட்டுத் திட்டம் வழங்கப்படுகின்றது என்று கூறினாரே தவிர எந்த ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையை ஏற்றும் வழங்குவதாக தெரிவிக்கவில்லை.

எனினும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பிதாமகனாக மனோ கணேசன் தன்னை காட்டிக்கொள்ள முற்படுகின்றார். வெளிநாட்டு நன்கொடைகள் கிடைக்கின்ற போது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற அரசாங்க அமைச்சர்கள் அதை அமுல் படுத்துவார்கள். இதுதான் பொதுவான நடைமுறையாகும்.

இதில் மக்களுக்கு நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே பிரதானமாகும். பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  எதிராணியிலுள்ள அரசியல்வாதிகளை விமர்சனம் செய்து அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை கடைபிடித்து வருகிறது. நாம் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக எமது நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தி அரசியல் செய்வதற்கு முற்பட்டால்  எமக்கும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

இலங்கையில் புரையோடிப் போயிருந்த இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் கடுமையான முயற்சியின் காரணமாக 13 வது அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

நல்லாட்சி காலத்தின் போது தேர்தல் தோல்விக்கு பயந்து மாகாணம் சபை தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி  மாகாண சபை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதில் பிரதான பங்கு வைத்தவர் முன்னாள் அமைச்சர்  மனோ கணேசன் . மாகாண சபை தேர்தல் முறையே இல்லாமல் செய்து விட்டு இன்று சிறுபான்மை மக்களின் ரட்சகர் போல் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. அதேபோல தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதாக மார்தட்டிக் கொண்டு 50 ரூபாய் சம்பளம் அதிகரிப்பை கூட பெற்றுக் கொண்டிருக்க முடியாத கையாலாகாத தனத்தை மலையக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மலையகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்து ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொடுப்பதாக கூறி போலியான நியமனக் கடிதங்களை வழங்கிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டதையும் இங்கு நாம் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.

இவ்வாறான மக்கள் விரோத செயற்பாடுகளில் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் எப்போதும் ஈடுபட்டது கிடையாது. தேர்தல் வெற்றியை விட சமூக மேம்பாடு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மேலானது என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நல்லாட்சி காலத்துக்கு முன்பே இலங்கை தொழிலாளர் காங்கிரசி தலைமையில் பல்வேறு வேடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் எவ்விதக் கட்சி பாகுபாடும் இருக்கவில்லை. ஆனால் நல்லாட்சி காலத்திலேயே முதல் முதலாக கட்சி ரீதியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அன்று கட்சி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று வீடுகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் வழங்குவது நியாயமானதாகும்.

மலையக மக்கள் எந்த தொழிற்சங்கத்தில், அரசியல் கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களில் வீட்டுத் தேவை யாருக்கு இருக்கிறது என்பதே முக்கியமானதாகும். அவற்றை நிறைவேற்றுவது தற்போதைய அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கடமையும் ஆகும். எம்மைப் பொறுத்த வரையிலே எல்லா விடயங்களுக்கும் கட்சி கலாச்சாரத்தை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை இந்திய வம்சாவளி மக்கள் ஒற்றுமையாக இருந்து தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் காப்புணர்ச்சிக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்படுமாறு மனோ கணேசன் க்கு அழைப்பு விடுகிறோம் எனவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பகுதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *