யாழ் மத்திய கல்லூரி உட்பட்ட அறிவார்ந்த கல்லூரிகளின் வளர்ச்சிக்காக என்றும் அறம் சார்ந்தே நிற்பேன்…! அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்…!

யாழ் மத்திய கல்லூரி விடயத்தில் எனது அரசியல் அதிகாரங்களை ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை பயன்படுத்தப் போவதுமில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த 19 ஆம் திகதி  பாடசாலை மாணவர்கள்இ பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த பாடசாலையில் இடம்பெற்ற இப் போராட்டமானது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில்  குறித்த கல்லூரியின் பழைய மாணவனும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் வெளியிட்ட முகநூல் பதிவில்,

கல்லூரிகளின் வளர்ச்சியே கல்விச்சமூகத்தின் எழுச்சி, தமிழ் தேசத்தின் கல்லூரிகள் எல்லாமே நிமிர்ந்தெழவேண்டும், இதுவுமே என் நோக்கும் இலட்சியமும்.

ஆனாலும், யாழ் மத்திய கல்லூரி எனக்கு என் இரத்தமும் தசையும் போன்றது.

நான் இந்த கல்லூரியின் பழைய மாணவன் என்பதற்காக எனது அரசியல் அதிகாரங்களை ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை-பயன்படுத்தப் போவதுமில்லை.

நான் தேடிக்கொண்டிருந்தது சிறந்த அதிபர், சிறந்த நிர்வாகி, அது பெண்ணாகவும் இருக்கலாம், ஆணாகவும் இருக்கலாம், அழிவு யுத்த காலத்தில் அச்சம் தரும் சூழலில் வராது வந்த அதிபர் நாயகமாக யாழ் மத்திய கல்லூரியில் வந்தமர்ந்தவர் அமரர் இராசதுரை அவர்கள்.

இடிந்தும் சிதைந்தும் இருந்த யாழ் மத்திய கல்லூரியை மறுபடி தூக்கி நிறுத்திய அவரது சாதனைகளுக்கு உந்து கோலாக நான் இருந்திருக்கிறேன் என்று சாட்சியம் கூற அதிபர் இராசதுரை இன்று உயிருடன் இல்லை.

ஆனாலும் சாட்சியம் கூற இன்றும் வரலாற்று மனிதர்கள் உண்டு. தமிழ் தேசியம் என்ற ஒற்றைச்சொல் மந்திரத்தின் பெயரால் அதிபர் இராசதுரை என்ற ஆளுமை இல்லாமால் ஆக்கப்பட்டார்,

அதிபர் இராசதுரைக்கு அடுத்து நான் கண்ட சிறந்த நிர்வாக திறன் மிக்கவர் அதிபர் இந்திரகுமார். இவரை விடவும் ஆற்றல் உள்ளவர் ஒரு பெண்ணாக இருப்பினும் அவரையே நான் சிபார்சு செய்திருப்பேன்.

இங்கு பெண் ஆண் பிரச்சினை அல்ல பிரதானம், ஆளுமையும் ஆற்றலும் மிக்கவர்களே எமக்கு தேவை.

அதிபர் இராசதுரையை தமிழ் தேசியத்தின் பெயரால் கொன்றொழித்து அகற்றியது போல் அதிபர் இந்திரகுமாரை பெண்ணியத்தின் பெயராலும் சாதியத்தின் பெயராலும் உயிருடனே அகற்ற முற்படும் ஈனச்செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம்.

பெண்ணியம் பற்றி, பெண்கள் உரிமைகள் பற்றி நாம் தெளிவான நிலைப்பாட்டை கொண்டவர்கள்.

ஆற்றல் உள்ளவர்கள் பெண்கள் என்றும், ஆயுதம் எந்த வேண்டும் அவர்கள் என்றும் நடை முறையில் நிரூபித்தவர்கள் நாம், இயக்கத்தில் இணையும் பெண்களை சீருடை தைக்கவும், மருத்துவம் பார்க்கவும், சமையல் அறையில் இருத்தவும் சிலர் வகுத்திருந்த பழைய பாரம்பரியங்களை உடைத்து, முதன் முதலில் ஆயுதம் தரித்த பெண்களாக ஆண்களுக்கு நிகராக அவர்களை நிறுத்தியவர்கள் நாங்கள். 

ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் களப்பளியான பெண் போராளி எனது சகோதரி சோபா. 

இலங்கை அரசின் தேசியக்கொள்கையில் தேர்தலில் பெண்களின் பிரதிநித்துவம் 25 வீதமாக இருப்பினும், எமது கட்சிக்கொள்கையில் பெண்களின் பிரதிநித்துவம் ஐம்பதுக்கு ஐம்பது என்ற சமத்துவக் கோட்பாட்டை கொண்டவர்கள் நாம்.

ஆகவே ஆளுமை மிக்க பெண்களை உருவாக்கவும் அரச உயர் பதவிகளில் அவர்களை உட்கார வைக்கவும் நாம் ஒருபோதும் பின்நின்றதும் இல்லை- பின்நிற்கப்போவதில்லை.

அநீதியான புறக்கணிப்புகளும் பாகுபாடுகளும் எங்கு நடக்கின்றதோ அதற்கு எதிராகவே என்றும் நாம் உறுதியுடன் நிற்பவர்கள். ஒளிவிடு அறிவுச்சுடர்களை உருவாக்கித்தந்த யாழ் மத்திய கல்லூரியின் நீடித்த வளர்ச்சிக்கு உறுதியுடன் உழைப்போம் வாருங்கள்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற சமத்துவக்கோட்பாட்டில் சகலரும் ஒன்று படுவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *