இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு 04 ஆம் திகதி ஆரம்பம்..!!

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 100 க்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.

அமெரிக்கத் தூதரகத்தினால் நடத்தப்படும் இந்த மாநாடு, இளைஞர்களின் ஈடுபாடு, தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு தளமாக உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் உட்பட தெற்காசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து வருகை தரும் பிரதிநிதிகளுடன் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் அமைந்துள்ள ஐந்து American Spaceகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

சமூக சேவையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்திக் காட்டும் வகையில் கல்வி வளாகங்களிலுள்ள தராதரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான செயற்திட்டத்தையும் இவ்வருட உச்சி மாநாடு உள்ளடக்கியிருக்கும்.

உள்ளூர் சமூகங்களுக்குள் நேர்மறையான தாக்கத்தையும் நிலைபேறான அபிவிருத்தியையும் வளர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள ஒரு பின்தங்கிய பாடசாலையிலுள்ள ஒரு நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் மரக்கறித் தோட்டம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் இம்மாநாட்டில் பங்குபற்றும் இளம் தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவர்.

அமெரிக்கத் தூதரகத்தின் இளைஞர் மன்றம், அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவப் பண்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 18 முதல் 25 வயதுடைய துடிப்பான இலங்கையரை உள்ளடக்கிய ஒரு மன்றமாகும். 

பல்வேறு பின்னணியுடைய 15 இளைஞர்களைக் கொண்ட ஒவ்வொரு இளைஞர் மன்றக் குழுவும், தலைமைத்துவத் திறன்களை கூர்மைப்படுத்துவதற்கும், செயற்திட்டங்களை முகாமை செய்யும் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், ஒன்றிணைந்த தீர்வுகள் ஊடாக சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயற்படுகின்றன. 

அத்துடன், ஆண்டு முழுவதும் கற்றல், பரிமாற்றம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளுக்கான வாய்ப்புகளை வழங்கி, தலைமைத்துவப் பண்புகளை தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்யும் மையங்களாக இலங்கையிலுள்ள ஐந்து American Spaceகளும் தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *