வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார் – சாரதியை கைது செய்ய முயற்சி

 

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலமை நிலவியது.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேச பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்த சமயத்தில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையுடன் ஊர்தி அருகே சென்ற வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் எனவும் ஊர்தி சாரதியினை வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தமையினால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியது.

அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர். 

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் புகலுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சிகளின் பிரமுகர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தியமையுடன் கண்ணீர் மல்கி தமது கவலைகளை வெளிப்படுத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புதிய பேரூந்து நிலையம் வரை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *