‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப்பொருளில், நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(4) மன்னாரில் மன்னாரில் மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு சொந்தகாரரான மக்கள் காணிகள் இன்றியும் வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இதனடிப்படையில் மக்களின் காணிகளில் குடியிருக்கும் படையினர் , காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் கடிதங்கள் அனுப்பி வைக்கும் முகமாக குறித்த நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் காணிகள் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் மன்னார் தபாலகத்தின் இருந்து ஜனாதிபதி காரியாலயத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.