மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தி பகுதியில் வீதித்தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்றைய தினம்(05) வீதிகளை மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம்(04) மாலை அடம்பன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக குறித்த வீதியில் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், காபட் வீதி என்ற காரணத்தினால் வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும், எனவே குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு முன்னதாகவே பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டும் இதுவரை எவ்வித வீதித்தடைகளும் அமைக்கப்படாமையினால் தொடர்ச்சியாக இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி மாவட்ட செயலாலார்,உதவிபிரதேச செயலாளர்,பிரதேச சபை செயலாளர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் ,பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன் விரைவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்த நிலையில் மக்கள் போராட்டத்தை அமைதியான முறையில் கைவிட்டனர்
குறித்த போராட்டத்தில் அடம்பன் பகுதி மக்கள்,மதத்தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.