சாந்தன் வர நடவடிக்கை எடுத்தோம்; புற்றுநோயே அவரைப் பலியெடுத்தது! இலங்கை அரசு தெரிவிப்பு

குற்றவாளியாக இருந்தபோதும் சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும், புற்றுநோய் அவரைப் பலிகொண்டுவிட்டது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றும்போது சாந்தனின் மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாந்தன் இந்தியாவின் முன்னாள் பிரதமரின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியாவார். இந்தியாவிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் சாந்தனை இலங்கைக்கு அழைத்து வந்து அவரின் உறவினர்களுடன் இணைக்க அரசு முயற்சித்தது. ஆனால், இந்திய அரசிடம் இருந்து சாதகமான பதில்கள் உடனடியாகக்  கிடைக்கவில்லை.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் உயிரிழந்துவிட்டார். இது இயற்கை மரணமே. இதனால் இந்த விடயத்தை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டாம். அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் இருந்து விடுபடுங்கள்.  – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *