2,210 ஆவது நாளை எட்டியுள்ள தமிழ்த் தாய்மாரின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுப்படுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் கவனயீர்ப்பு Nhராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் 08 மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகைத் தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டனர்.

இதன்போது ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய், சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?, முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?, 55 ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்? போன்ற கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்தப் போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி,

மகளிர் தினமாகிய இன்றைய தினத்தை (08;) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இதுபோன்றதொரு நாளில் எமது தொடர் போராட்டம் ஆரம்பமானது.

பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது.

எனினும் உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம், வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேசத்தையும் ஏமாற்றி, எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான், காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *