கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம்

ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன் என கனடாவில்; படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயாரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடாவின் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில், கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணியளவில் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமன்று 35 வயதுடைய இளம் தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

இவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அவரைத் யாரோ தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்த நிலையில், அவரை தாக்கிய தாக்கிய நபரை அவரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும், தம்மைத் தாக்கியவர் இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்தார்.

இதனையடுத்து, தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இந்நிலையில், 911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்) என்பவர் தெரிவிக்கையில்,

வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை இரு பொலிஸார் அழைத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம் என தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ் கூறுகையில்,

எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். இதன்போதே இந்த சம்பவத்தில் இறந்த நிலையில் 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலைக்குக் கொண்டுச்செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *