வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜககம்; நாளை வெடிக்கவுள்ள போராட்டம்! – தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நாளை  மாலை 4 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி வழிபாட்டின்போது தமிழர்கள் மீது பொலிஸார் புரிந்த அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட 8 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் யாழ். நல்லை ஆதீன முன்றலில் நாளை மாலை 4 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும், அதில் அனைவரையும் அணிதிரளுமாறும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு சார்பாக  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“நேற்றுமுன்தினம் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களைப் புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

அதன் உச்சக்கட்டமாகத் தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூஜையில் ஈடுபட்ட தருணம், மோசமாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பூஜை மற்றும் படையல் பொருட்கள் சப்பாத்துக் கால்களால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டதுடன் பூசகர் சிவத்திரு மதிமுகராசா மீளவும் கைது செய்யப்படுள்ளார். அவருடன் மேலும் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமாக சைவத்தமிழர்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகுக்கும் அரச உயர்பீடத்துக்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களினதும் கடமையாகும்

உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் மகா சிவராத்திரி ஆகும்.

அந்தவகையில் இந்த மகா சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் நடைபெற்ற மோசமான சம்பவங்களைக்   கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பைப் பதிவு செய்வோம்” – என்று அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *