முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கு இன்று(11) முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இன்று(11) காலை சென்ற கேப்பாப்புலவு மக்கள், மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் மாவட்ட செயலாளருக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர்.
பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் ,ஆலயங்கள் , தேவாலயம்,பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன
குறிப்பாக, மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக 62 பெயரின் 171 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பதாக தெரிவிக்கின்றனர்.