இம்மாத இறுதிக்குள் புதிய கிராம சேவகர் நியமனம்…! பிரதமர் திட்டவட்டம்…!

கிராம சேவகர் பற்றாக்குறை காணப்படும் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதிப்பகுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும்,  பிரதமருமான தினேஸ் குணவர்தன  தெரிவித்தார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தை மக்கள் பாவனைக்காக நேற்று (12) திறந்துவைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்நோக்கிய போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்தார்.

இதன்போது அரச ஊழியர்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அரச ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

எனினும் ஜனாதிபதியின் ஆலோசனையில் விசேட வழிமுறைகளை உருவாக்கி அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம்.

நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு விஷேட கொடுப்பனவு ஒன்றை வழங்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதுபோல பாடசாலையில் கற்று முன்னோக்கி செல்ல முடியாத மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப விஷேட பயிற்சிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். அதனை நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பவில்லை. எனினும் இப்போது அந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளுடன் நட்பு ரீதியாக தொடர்புகளை ஏற்படுத்தி எமது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பல திட்டங்களை வகுத்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். 

இப்போது நாட்டில் மாகாண சபை , உறுப்பினர்கள் இல்லாமல் மாகாண ஆளுநர்களின் தலைமையில் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராமங்களுக்கான பணிகளை முன்னெடுக்க மாவட்ட செயலாளர்களும், பிரதேச செயலாளர்களும் அவர்களுக்கு கீழ் பணியாற்றி வரும் அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

புத்தளம் மாவட்டத்தில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றன. எனவே, அந்த வளங்களை மேலும் வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு உரிய முறையில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.

எமது நாட்டில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. அவற்றை நிவர்த்திக்க நாம் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 

இந்த மாதத்திற்குள் கிராம சேவகர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு இடம்பெறும்.  அதன் பின்னர், பற்றாக்குறையாக உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் புதிதாக கிராம சேவகர்களை நியமிக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply