காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை..!

 

காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று(13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையை பயன்படுத்திக்கொண்டு சிலர் காடுகளுக்கு தீ மூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம்.

காடுகளுக்கு தீ வைப்பது சட்டவிராேதமான செயலாகும். அவ்வாறான சம்பவங்கள் சில கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

ஒரு சில இடங்களில் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் போது அதனை முப்படைகளின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் காடுகளுக்கு தீ மூட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேபோன்று சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாரிய விளைவுகளை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

நாட்டில தற்போது வரட்சியான காலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோன்று விவசாய பிரதேசங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது.

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு இடம்பெறும் பிரதேசங்களுக்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *