ஸ்ரீலங்கா காவல்துறையின் காட்டு மிராண்டித்தனமான செயலுக்கு மிக வன்மையாக கண்டிக்கிறோம் – இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை!

இலங்கை காவல் துறையினரின் அராஜகமான செயல்பாடுகளுக்கு மிக வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாக  இந்து சமயத்  தொண்டர் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலான  வழிபாட்டு வரலாறுகளை கொண்ட ஆதியும் அந்தமும் இல்லாத எம்பெருமானின் வரலாறு கொண்ட எமது சைவப் பெருமக்கள், எம்பெருமான் ஆதிலிங்கேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று அன்போடும், பக்தியோடும் வழிபடுவதற்கு ஒன்று கூடியிருந்த வேளை  மனித நேயமின்றி  காட்டு மிராண்டித்தனமாக சிவ பக்தர்களை தாக்கியுள்ளதுடன், ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினரை கைது செய்து தாக்கி சிறைப்பிடித்ததுடன், பூசைப்பொருட்கள், பூசைக்கு வைக்கப்பட்ட கும்பங்கள், என்பவற்றினை சப்பாத்துக்கால்களினால் அடித்து, உதைத்து இருந்ததுடன் ஆண், பெண் என்ற வேறுபாடுகளின்றி அட்டூழியம் செய்துள்ளனர். 

ஒருநாடு, ஒரு மக்கள், நல்லிணக்கம் என்று உலகத்துக்கு கொக்கரித்துக் கொண்டு சொந்த நாட்டு மக்களையே அவர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மதிக்காது அராஜகம் செய்கின்றது காவல்துறை. காலம் காலமாக வரலாற்றினை கொண்ட சைவத்தமிழினம் தொடர்ந்தும் இவ்வாறான அரச இயந்திரங்களின் பயங்கரவாத செயல்கள் மக்கள் மீதான வழிபாட்டு உரிமை மறுப்பானது வெளியுலகுக்கு நல்லவர்கள் போன்று காட்டிக்கொண்டு அட்டூழியத்தில் ஈடுபடுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் ஒருபோதும் இந்த நாட்டிலே சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ ஏற்படுத்தாது. மீண்டும் மீண்டும் சைவத்தமிழர்களை சீண்டுகின்ற நடவடிக்கையிலேயே அரச பயங்கரவாத நடவடிக்கைகள் இருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் தலையிட்டு எமக்கான நீதியினை சர்வதேச நீதிமன்றத்தின்  ஊடாகவே பெற்றுத்தர முனைய வேண்டும் இல்லையேல் “சிவன் சொத்து குலநாசம்” என்ற வாசகத்துக்கு இணங்க சிவபக்தர்களை துன்ப துயரத்துக்கு உள்ளாக்குபவர்கள் நாசமாவது திண்ணம். அத்தோடு இந்த நாட்டில் படிப்படியாக அழிவு இடம்பெற்று வருகின்றது. எனவே இனியாவது உணர்ந்து சைவ மக்களின் உரிமைகளை  மதிக்கப்பளிக்க  வழி செய்ய வேண்டும். இல்லையேல் அழிவு உறுதி. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply