வெடுக்குநாறி மலை ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று சிவபக்தர்களை கைது செய்துள்ளமை மாபெரும் குற்றமாகும் என, யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் மரபுசார் வழிபாட்டிடங்களில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயமும் மிக முக்கியமானதொன்றாகும். ஆதி சிவன் ஆலயத்தில் கடந்த மகா சிவராத்திரி தினமன்று பொலிசார் பூசை வழிபாடுகளை குழப்பியது மட்டுமின்றி பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட சிவபக்தர்களாகிய பூசகர், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் மேற்கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதோடு அவர்களில் எட்டுப் பேரினை கைது செய்து, அவர்கள்மீது தொல்லியல் சட்டத்தின்கீழ் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைத்துள்ள செயலினை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வழிபாட்டுரிமை இலங்கையர் அனைவருக்கும் உள்ளது. அதனடிப்படையில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பக்தர்களின் வழிபாட்டுரிமையினை யாரேனும் தடுத்தல் என்பது அடிப்படை உரிமை மீறலாகும்.
தமிழர்களுடைய பாரம்பரிய பண்பாட்டு வழிபாட்டிடங்களினை பௌத்த மதம் சார் தொல்பொருள் சின்னங்களாக அடையாளப்படுத்தி அப்பிரதேசங்களை அரச கட்டமைப்பின் உதவியுடன் பௌத்த சிங்கள பேரினவாதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட இதே வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டன. எனினும் இனந்தெரியாத நபர்களால் செய்யப்பட்ட குறித்த சம்பவம் தொடர்பில் ஒரு முறையான விசாரணை செய்யப்படவோ, அல்லது இதுவரை யாரும் கைது செய்யப்படவோ இல்லை. ஆனால் சிவராத்திரி தினமன்று தங்களின் மரபுசார் வழிபாட்டிடத்தில் அமைதியான முறையில் வழிபாடுகளை செய்த சைவத் தமிழ்மக்கள் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எவ்வகையில் நியாயமானது?
அரசாங்கம் தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களை சிங்கள பௌத்த மயமாக்கி தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையினை தடை செய்வதன் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் மீது பாண்பாட்டு மற்றும் கலாசாரம் சார்ந்த கட்டமைக்கப்பட்ட ஒரு பண்பாட்டு இனப்படுகொலையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்ற போதும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரச கட்டமைப்புக்கள் முன்னிற்கின்றன, அவற்றிற்கு நிதி வழங்குவதில் அரசு முனைப்புக் காட்டியே வருகின்றது. இதன் மூலம் அனைத்து இலங்கை மக்கள் மீதும் மேலும் பொருளாதாரச் சுமை அதிகரிக்கின்றது.
எனவே இலங்கைத் தீவில் நீடித்து நிலைத்த சுபீட்சமான வாழ்க்கையையும் அமைதியையும் விரும்பும் அனைவரும் இன மத பேதமின்றி ஒன்றுபட்டு இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்க வேண்டும். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவற்றிற்கு எதிராக போராடுவதோடு, இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது தடுக்க வேண்டும். அத்துடன் பொய்யான குற்றச்சாட்டுக்களில் தடுப்புக்காவலில் உள்ளோர் உடனடியாக விடுவிக்கப்படவும் வேண்டும் என நாங்கள் அரசினைக் கோரி நிற்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.