வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணி தாமதம்!

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவரும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் சுகாதார தரப்பினால் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணி தாமதமடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு கண்டிப்புடனான கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் கட்ட தடுப்பூசி சனத்தொகை அடிப்படையில் 29.6 வீதமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த காலப்பகுதியில் வரையில், இந்தளவு மட்டம் 70 சதவீதமாக காணப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தடுப்பூசி குறைந்த அளவில் வழங்கப்பட்டமைக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரே காரணம் என குறிப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி பெற்றவர்களின் அடைவு மட்டம் அதிகரிக்காத பட்சத்தில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகியோர் கணக்காய்வாளர் விசாரணைக்கு பதிலளிக்க வேண்டியேற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தடுப்பூசி வழங்கலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனிப்பட்ட அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதிக்கு முன்பதாக வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 45 வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வாராந்தம் 10 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *