மே தினத்தில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..! ரணிலிடம் கையளிக்கப்பட்ட கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம்

 ஐக்கிய தேசிய கட்சியை தலைமைத்துவமாக கொண்டு உருவாக்கப்படுகின்ற தேர்தல் கூட்டணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய அநுர பிரிதயதர்ஷன யாப்பா தலைமையிலான குழு இணைவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தில் இந்த கூட்டணி அறிவிக்கப்படவுள்ளதுடன், கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் அமைச்சரவை கூட்டத்தில், உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய செயலாற்றுகை குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார்.

இந்த குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நிமல் லான்சா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டனர்.

இந்த குழுவினரே கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இணக்கப்பாடுகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அணியொன்று கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

ஹர்ஷ டி சில்வா, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரோஹினி கவிரத்ன, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களே இவ்வாறு கட்சியை விட்டு விலகி தனித்துச் செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த மாற்றம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, குறித்த ஐவரும் அல்லது மேலும் சிலரை இணைத்துகொண்டு ஆளுங்கட்சியில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply