ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்..!

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது. 

இலங்கையில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோரப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், ஆஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்காணும் வகையிலும், கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். 

இந்தச் சந்திப்பின் போது ஆஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென் ஆசிய மற்றும் இந்து சமுத்திரக் கடற் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் ஆஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியார் அடங்கியிருந்தனர். 

மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில், கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி கே. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பின் போது தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் நலனோம்புத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *