இன்று முதல் பொது அமைதியை பேணும் வகையில் நாடு முழுவதும் காவல் பணியில் ஆயுதம் தாங்கிய படை: சிறப்பு வர்த்தமானி மூலம் ஜனாதிபதி உத்தரவு
கொழும்பு, பெப் 22:
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணும் வகையில் ஆயுதம் தாங்கிய படை காவல் பணியில் ஈடுபடவுள்ளது. இதற்கான உத்தரவை அதிவிசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவு அத்தியாயம் 40 இன் மூலம் ஜதனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மின்சாரம் வழங்குதல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்றையதினம் வெளியிட்டிருந்தார்.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற அதை ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்றுமுதல் அமலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியைப் பேணுமாறு ஆயுதப்படையினருக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.