மின் கம்ப இணைப்பில் திடீரென தீப்பிடித்து எரிவதைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது சுப்பையா சண்முகம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,
தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிருப்பு வீட்டுப் பகுதியில் தனது கண்முன்னே மின் கம்பத்தில் திடீரென மின் இணைப்பு தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் சீன் தோட்ட மேல் பிரிவில் அடிக்கடி மின் இணைப்புகள் தீப்பிடிப்பதாக தெரிவிக்கும் தோட்ட மக்கள், இந்தத் தோட்டத்தில் தொடர் குடியிருப்புகள் அருகில் காணப்படும் மின் கம்பங்களில் மின் கசிவுகள் மற்றும் இணைப்புகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை பிராந்திய தொழில் நுட்ப அதிகாரிகள் பார்வையிட்டு சீர்த்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.