
இறப்பர் மரத்தையும், தேயிலை செடியையும் காப்பாற்றுவதற்கு இன்று சபையை கூட்டியுள்ள அரசாங்கம் தோட்ட மக்களை மறந்து செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள நாடகம் 24 ஆம் திகதி நீதிமன்றுக்கு வரவுள்ளது. ஆனால் அன்று தொடக்கம் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு போராடி வரும் மக்களுக்கு இன்று வரை தீர்வில்லை.
அன்று ஆயிரம் ரூபா வாழ்க்கை செலவுக்கு போதுமானதாக இருந்தது. இப்போது 2,500 ரூபாய் தேவை. இதிலும் இழுத்தடிப்பு காணப்படும். ஆகவே அமைச்சர்கள் இந்த வழக்கை இழுத்தடிக்காமல் உடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
அப்படி இந்த அரசு செய்தால் ஒரே நாடு ஒரே சட்டம் என்று நாம் ஏற்றுக்கொள்வோம். இந்தியாவுடன் கைகோர்க்கும் இந்த அரசு இந்தியா வம்சாவழி மக்களை கைவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தோட்டத்தொழிலாளர்களும் மனித உயிர்கள் தான். அவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசு. இந்த பாராளுமன்றின் கடமை. அவர்கள் பறிக்கும் கொளுந்தின் அளவை இங்குள்ள யாரும் பறிக்க தயாரா. மலையகம் எங்கள் தாய் நாடு. அதனை அபகரிக்க விட மாட்டோம். இரத்தம் சிந்தி உழைக்கும் மலையக பெண்களின் உழைப்பை தான், சிலோன் ரீ என நீங்கள் பெருமை கொள்கிறீர்கள்.- என்றார்.