டெல்லி முதல்வர் நாட்டில் புரட்சியை உண்டாக்குவார் என்கிறார் பஞ்சாப் முதல்வர்

அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது,

நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல.

ஒன்றுபடுவோம் இல்லையெனில் நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார். டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.

அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர், பதவி விலக வேண்டும் என்று எந்தவொரு சட்டமும் கூறவில்லை.

அவர் அமலாக்கத்துறை காவலில் மட்டுமே இருக்கிறார். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பர். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்” என அவர் கூறினார்.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திய நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்தினர்.

குறித்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கெஜ்ரிவாலை 10 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

எனினும், கெஜ்ரிவாலை 6 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply