சோளப் பயிற் செய்கைக்கான விதைப் பதப்படுத்தும் நிலையம் விவசாய அமைச்சர் மகிந்த அபயவீர அவர்களால் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியாவிற்கு விஜயம் செய்த விவசாய அமைச்சர் மகிந்த அபயவீர பூவரசன் குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் நல்லின சோளப் பயிற்செய்கை நிலங்களை பார்வையிட்டதுடன், பயிற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, வவுனியா, நெளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட சோளப் பயிற்செய்கைக்கான விதை பதப்படுத்தும் மற்றும் விதை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்ததுடன், அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டதுடன், நிலையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வியாபார நிலையத்தையும் திறந்து வைத்து, வியாபார நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தார்.
இதில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.