இஸ்ரேலில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி: போலி வைத்தியர் கைது..!

சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மக்களை அழைத்துள்ளார்.

சந்தேகநபர் 9 பேரிடம் இருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கொழும்பு இல 5 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply