
அரசாங்கத்தின் தவறான முடிவுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் முன்னெடுத்து வரும் தவறான பொருளாதார நிர்வாக முறைமை காரணமாகவும் அரசாங்கத்தின் தவறான முடிவுகள் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது.
நாடு எந்தத் துறைகளிலும் முன்னோக்கி பயணிப்பதை காண முடியவில்லை. இதுவரை அரை மணித்தியாலத்துக்கு அமுல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு தற்போது இரண்டு மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏப்ரல் மாதமளவில் நான்கு மணித்தியால மின்வெட்டமாக மாற்றமடையலாம்.
இந்நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டொலரை செலுத்த வேண்டாம் என்று அரச வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. மத்திய வங்கி எடுக்கும் இந்தத் தீரமானங்களால் மின்வெட்டு பலமடங்கு அதிகரிக்கக்கூடும்.
தற்போதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டுவந்த 1,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அவற்றை விடுவித்துக்கொள்ள நாட்டில் டொலர் இல்லை.
உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தொழிற்சாலைகள் தங்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள வேண்டியது அவசியம். எனினும் அவற்றை இறக்குமதி செய்துகொள்வதற்கும் டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
தபால்துறையில் உள்ளவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். ஏனெனில் தபாலுறை தயாரிப்புக்கு தேவையான கடதாசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் சகல துறைகளும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் ஆகும்போது இந்த நிலைமையானது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்யும்.
மத்திய வங்கி ஆளுநருக்கோ, நிதி அமைச்சருக்கோ இது தொடர்பில் போதிய அறிதல் இல்லை. அவர்கள் வேறு உலகத்தில் வாழ்வதை போன்றே வாழ்கின்றனர்.
அரசாங்கத்தை பிரச்சினைக்குள் தள்ளுவதற்காக மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறான முடிவுகளை எடுக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.- என்றார்.