அதிகரித்த வெப்பம் – உயிராபத்து தொடர்பில் நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை..!

 

நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய நாட்களில் வெப்பமான காலநிலை குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

மேலும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களும் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வெப்பத்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பமான காலநிலை காரணமாக நீர்ச்சத்து குறைவினால் மயக்கம், சுயநினைவு இழப்பு மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை கட்டுப்படுத்த இளநீர், எலுமிச்சை, சூப் போன்றவைகளை முடிந்தவரை குடிக்க வேண்டும் என தீபால் பெரேரா தெரிவித்தார்.

நிறுத்தி இருக்கும் கார்களில் சிறுவர்கள், செல்லப்பிராணிகளை விட்டுச்செல்வதால் அவர்களின் உயிர்களை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறு குழந்தைகளுக்கு வியர்வையினால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

நாலொன்றுக்கு அடிக்கடி தண்ணீரில் கழுவுவதன் மூலமும், ஈரமான துணியால் துடைப்பதன் மூலமும் இந்த நிலையை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகபட்ச சூரிய ஒளி காலை பதினொரு மணி முதல் மதியம் இரண்டு முப்பது வரை இருக்கும். எனவே அந்த நேரத்தில் வெயிலில் இருப்பதை குறைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

உழைக்கும் மக்களின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும். இதனால் பாடசாலை மாணவர்கள் கடும் வெயிலில் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

போதியளவு தண்ணீர் அருந்துவது, ஓய்வெடுப்பது, வீட்டில் தங்குவது, முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களைக் கவனித்துக்கொள்வது, வெளியில் சுறுசுறுப்பான வேலை செய்வதை தடுப்பது, வெள்ளை மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிவது அவசியம் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்தாலும், வெப்பநிலையை குறைக்க இன்னும் போதுமானதாக இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *