அழகு நிலையங்களுக்குள் புகுந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  

இலங்கை தோல் வைத்திய நிபுணர்களின் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கொழும்பில் உள்ள பல முன்னணி அழகு சாதன பொருட்களின் விற்பனை நிலையங்களில் நேற்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, பதிவு செய்யப்படாத தோல் சிகிச்சை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு விற்பனை செய்தவர்கள் கொழும்பு புறக்கோட்டையில் அழகு சாதன பொருட்களின் மொத்த விற்பனை நிலையங்களில் பதிவு செய்யப்படாத தோல் சிகிச்சை மருந்துகளை கொள்வனவு செய்ததாக  தெரிவித்ததாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கதிரேசன் வீதியில் உள்ள இரண்டு அழகுசாதனப் பொருட்களின் மொத்த விற்பனை நிலையங்களை சோதனை செய்ததில் 470 க்கும் மேற்பட்ட தோல் சிகிச்சை மருந்துகளைக் கண்டுபிடித்தனர்.

குறித்த மருந்துகள் வைத்தியர்களின் பரிந்துரையில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். இது ஒரு எளிமையான அழகுசாதனப் பொருள் அல்ல.

மூன்று மருந்து சேர்மானங்களை கொண்ட அத்தகைய மருந்துகளின் இரண்டு வகைகள் கைப்பற்றப்பட்டன. ஹைட்ரோகுவினோன், ட்ரெட்டினோயின் மற்றும் மொமடசோன் ஃபுரோயேட் கிரீம் ஆகியன 3 இரசாயன சேர்மானங்கள்  ஆகும். அவற்றில்  ஸ்டீராய்ட் மருந்தும் ஒன்றாகும்.

ஸ்டெராய்ட் மருந்துகள் உள்ளிட்ட தோல்நோய்களுக்கான மருந்துகள் கண்டிப்பாக  வைத்தியரின் ஆலோசனையின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது அது சருமத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அந்த அதிகாரி கூறினார்.

நகரத்திலுள்ள அழகு சாதன பொருட்களின் விற்பனை நிலையங்களில்  கிடைக்கும் இவ்வகையான மருந்துகள் சருமத்தை வெண்மையாக்கும் அல்லது சுத்தப்படுத்தும் என நம்பி வாடிக்கையாளர்களை வாங்குவதற்கு தூண்டுகிறது. இது பின்னர் அவர்களின் நிறத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இவ்வகையான அழகு சாதன பொருட்கள் பற்றிய பல முறைப்பாடுகள் இலங்கை தோல் வைத்திய நிபுணர்களின் சங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதோடு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருந்துகளை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையின் கீழ் ஆறு வாரங்களுக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படலாம் என இலங்கை தோல் வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

மெலஸ்மா எனப்படும் தோல் நிறமிக் கோளாறுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு மேலதிகமாக பயன்படுத்தினால் கடுமையான தோல் பிரச்சினைகள் ஏற்படலாம், இதன் காரணமாக பல முறைப்பாடுகள் கடைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply