கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – 05 ஆவது  நாளாகவும் தொடரும் போராட்டம் !

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான, தொடர் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம், ஐந்தாவது நாளாக இன்றும் (29) தொடர்கின்றது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும், நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை (25) குறித்த போராட்டம் ஆரம்பமானது.

பொதுமக்களால் ஆரம்பமான குறித்தப் அமைதிவழிப் போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து, சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் இன்றைய போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், காலத்தை இழுத்தடிக்காது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தமது அமைதி வழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

குறித்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் ஏந்தியவாறு அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *