திருமலையில் பழங்குடியின மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை தோப்பூர்- நல்லூர் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக அங்குள்ள பழங்குடியின மக்களோடு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.
குறித்த பகுதிக்கு நேற்றையதினம்(31) காலை நேரடியாக விஜயம் மேற்கொண்டு சந்திப்பில் ஈடுபட்டார்.
இதில் மாவட்ட செயலாளர், மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர்.
இதன் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கருத்துத் தெரிவிக்கையில்,
தோப்பூ-நல்லூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரம் என்னை சந்தித்திருந்தனர்.அதனை அடுத்து நான் இன்று(31) நல்லூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டேன்.
தோப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் காணிகளை பொய்யான ஆவணங்களை கொண்டு சிலர் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அங்குள்ள 600 ஏக்கர் காணியில் 300 ஏக்கர் காணியை பிடித்து விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான தரவுகளை நான் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளேன்.இதன் பின்னர் குறித்த காணிகள் மீட்கப்பட்டு பழங்குடியின மக்களிடம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.