ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் தரமுயர்த்துவதை நோக்கமாக கொண்டு காணிகளை அபகரிக்காது உள்ள காணிகளில் விளைச்சலை அதிகரிக்கச் செய்து முன்னேற்றமடைய வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித் துள்ளார்.
இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கமத்தொழில் அமைச்சின் கீழ் உர இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இங்கு வருகின்றன. பெருந்தோட்ட அமைச்சின் கீழ் தேயிலை உற்பத்தி இயங்குகின்றது. இந்த இரண்டு அமைச்சுக்களின் கூட்டுத்தாபன அமைப்புக்களினை அழைத்து உற்பத்தி திறனை மாத்திரம் கவனத்தில் கொண்டு இலாபத்தை எதிர்பாராத நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன்.
தேயிலைச் சபை நிலையத்திலிருந்து 1200 மில்லியன் ரூபா நிதியை வழங்கி இரண்டாயிரம் ரூபா மானியத்தை நாங்கள் வழங்கினோம்.
விலை குறைப்பு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக அறிந்தோம். ஆனால் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் இந்த செய்தியை முறையாக வெளியிடவில்லை. ஒருமாத காலமாக இந்த நடைமுறை அமுலிலே இருக்கின்றது. சரிபாதியாக விலை குறைக்கப்பட்டிருக்கின்றது.
நான் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பிறகு தேயிலைச் செய்கையாளர்களுக்கு உரம் இல்லாமை முக்கிய தடையாக இருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆகவே உடனடியாக உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து ஜனாதிபதியுடனும் கலந்துரையாடி அமைச்சரவையின் உதவியுடனும் சரிபாதியாக விலையைக் குறைத்து இருக்கின்றோம். உர பயன்பாடு தற்போது அதிகரித்து இருக்கின்றது.
சலுகை விலையில் தொடர்ச்சியாக உரம் வழங்கப்பட்டு வருகின்றது. சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரண முறையில் உரத்தை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றது. இதனையே உடனடியாக எங்களால் செய்ய முடிந்தது.
1965ஆம் ஆண்டளவிலே தேயிலை உற்பத்தியில் முதல்நிலையில் இருந்தோம். தற்போது 5ஆம் இடத்தில் இருக்கின்றோம். கிண்ணியா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி இருக்கின்றன. அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்ற நாங்கள் பார்க்க வேண்டும். எங்களுடைய நாட்டவர்களே நிபுணத்துவ அறிவை வழங்கியிருக்கிறார்கள்.
எங்களுடைய தொழில் நுட்பங்கள் அங்கு பறந்தன. எங்களுடைய நிபுணர்கள் அங்கு சென்று அந்த நாட்டிலே தேயிலைத் தரத்தை உயர்த்தி இருக்கின்றார்கள். உரமானியத்தை வழங்கி விலையை குறைப்புச் செய்த பிறகு விளைச்சல் அதிகரித்திருக்கின்றது.
ஐரோப்பாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்ய வேண்டுமாக இருந்தால் தரமான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டும். தரத்தை பற்றி இல்லாமல் விலையைப் பற்றியே நாம் கவனம் செலுத்தி வந்தோம். விரயம் அதிகமாக இருக்கின்றது.
2021ஆம் ஆண்டில் 63 நாற்று மேடைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது போதுமென்று சொல்ல மாட்டேன். இன்னும் அதிகரிக்கப்படல் வேண்டும். விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள நாற்று மேடையிலும் மாதிரிப் பயிர்ச்செய்கையிலும் தொழில்நுட்பத்தை புகுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய தொழில்நுட்பத்தோடும் இதை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். காணிகளை அபகரிப்பது எங்கள் நோக்கமல்ல உள்ள காணிகளில் அதிக விளைச்சலைப் பெறுவதுதான் எங்கள் நோக்கம். எங்களுடைய நாட்டின் தேயிலையின் தரம் மற்றும் கொழுந்தின் அளவு போன்றவற்றை அதிகரிக்க முடியும் என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
விவசாயத்துறையில் புதிய தொழில் நுட்பத்தை நாங்கள் புகுத்தி இருக்கின்றோம். மிளகாய்ச் செய்கையின் ஊடாக அதிக இலாபத்தை ஈட்டும் விவசாயிகள் இருக்கின்றார்கள். தேயிலை மற்றும் கொய்யா செய்கையாளர்களும் கூடுதலான இலாபத்தை ஈட்டுகின்றார்கள்.இதனால் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டார்.