தமிழக மக்கள் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக கோயம்பத்தூர் திருமண்டல பேராயர் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று(03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வாழ்த்து செய்தி தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இவ்வாறு நாம் நிதி உதவிகளை மேற்கொள்கிறோம்.
இங்குள்ள மக்களிற்கும், இந்தியாவில் உள்ள மக்களிற்கும் இடையில் மருத்துவம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நெருக்கமான தொடர்புகள் உள்ளது.
இது போன்ற மேலும் பல்வேறு உதவிகளை செய்வதற்கு மக்கள் தயாராக உள்ளனர்.
நேற்றைய செய்தியின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து சுற்றுலாவிற்காக பல ஆயிரக்கணக்கானோர் இலங்கைக்கு வந்துள்ளதாக அறிந்தேன்.
இது, பொருளாதாரத்தில் மாத்திரமல்ல இரு நாட்டுக்குமான உறவை பலப்படுத்துவதாகவே அமைகின்றது. மேலும் உறவு கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.