தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயத்திற்கான புதிய ஆலயம், இந்திய மற்றும் யாழ் ஆயர்களால் இன்றையதினம் (03) பிரதிஷ்டை செய்து திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் திருச்சபை பொறுப்புக் குருவான அருட்பணி டிக்சன் உதயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டதுடன், மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர்களால் ஆலய பெயர்ப்பலகை மற்றும் நினைவுக்கல் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தென்னிந்திய திருச்சபையின் கோயம்பத்தூர் திருமண்டல பேராயர் அதி வணக்கத்துக்குரிய ரவீந்தர் மற்றும் யாழ்ப்பாண திருமண்டல பேராயர் அதி வணக்கத்துக்குரிய V.பத்மதயாளன் ஆகிய இருவரும் இணைந்து ஆலயத்தை பிரதிஸ்டை செய்து திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து சிறப்பு பிரதிஸ்டை வழிபாடு இடம்பெற்றது.
குறித்த வழிபாட்டில், சிரேஸ்ட ஊழியர்களான வணக்கத்துக்குரிய செல்ல நாயகம், குகனேஸ்வரன் உள்ளிட்ட குருவாவானவர்களும், திருச்சபை மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த தேவாலயம் இந்தியாவில் உள்ள தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தினால் சாமாதானம் மற்றும் நல்லுறவினை வலுப்படுத்தும் நோக்குடன் கட்டி யாழ்ப்பாண ஆதீனத்திடம் கையளிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
குறித்த பணித்தளத்தின் ஊடாக சத்துணவு, சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறுவர் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.