கனேடிய தமிழர் பேரவை இமயமலைப் பிரகடனத்தில் இருந்து பகிரங்கமாக விலக வேண்டும். இது போன்ற நிலை மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்த மாபெரும் தவறுக்கு வழிவகுத்த முடிவெடுக்கும் செயல்முறையை வெளிப்படுத்துவதுடன், ஈழத் தமிழர்களிடமும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடமும் நேரடியாக மன்னிப்புக் கோரவேண்டும் என கனேடியத் தமிழர் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளது
அத்துடன் CTC யின் தொடரும் இனப்படுகொலை மறுப்பும், அதனை நியாயப்படுத்தும் செயற்பாடுமானது,
இழந்த உயிர்களைப் பெரிதும் அவமதிப்பதோடு, அவர்களின் சாம்பல்களையும், கல்லறைகளையும் இழிவுபடுத்துவதற்குச் சமமானதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது
இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்
கனடிய தமிழர் பேரவைக்கு (“CTC”) எதிரான கண்டனம் மற்றும் நடவடிக்கைக்கான அழைப்புகள் ஈழத்தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து உரத்து எதிரொலிக்கிறது.
எனினும், இது பற்றிய எந்த நடவடிக்கையும் எடுக்காத தன்மை CTC தரப்பில் நீடிக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினர்களிடமிருந்தும் ஒரு காத்திரமான பதிலை எதிர்பார்த்து பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள கிராமம் மற்றும் நகர சங்கங்கள் உட்பட, மாணவர் சங்கங்களுக்கும் அப்பால் இக்கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. CTC இன் நெருக்கமான இரகசிய உறுப்பினர்களையும் தாண்டி இவ்வாறான கண்டனங்கள் பரவலடைந்துள்ளன.
அண்மையில், கனேடியத் தமிழர் கூட்டு (“கூட்டு”) மார்ச் 23, 2024 அன்று நடத்திய மக்கள் சந்திப்பில் இது தெளிவாக வெளிப்பட்டது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான சமூக உறுப்பினர்கள் தங்கள் அக்கறை, விரக்தி, சீற்றம் மற்றும் கவலை என்பவற்றை CTC இன் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்தினர்.
ஏப்ரல் 27, 2023 அன்று, CTC யின் பிரதிநிதி திரு. ராஜ் தவரட்ணசிங்கம் இமயமலைப் பிரகடனத்தில் (“பிரகடனம்”) கையெழுத்திட்டார். அதில் தமிழ் மக்கள் மீது, இலங்கை அரசு இழைத்த கொடுமைகளான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் எவ்வித பொருள்கோடலோ, ஒப்புதலோ, அடையாளப்படுத்தலோ உள்ளடக்கப்படவில்லை. ஈழத்தமிழர்களிடமிருந்து எந்தவித கருத்து உள்வாங்கலோ அல்லது பங்களிப்போ இல்லாமல் குறித்த பிரகடனம் கையெழுத்திடப்பட்டது.
குறித்த பிரகடனம், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நியாயப்படுத்தவும் வரலாற்று ரீதியாக தொடர்ந்த அநீதிகளுக்கான தடயங்களை அழிக்கவும் முயல்கிறது. அதில் தமிழர்கள் குறித்த குறிப்போ அல்லது அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தோ இல்லாமை இலங்கையை சமத்துவம் மற்றும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகமாக படம்பிடித்து காட்ட முயல்கிறது. இது இலங்கை குறித்த உண்மைத் தன்மைக்கு வெகுவாக அப்பாற்பட்டது.
நிதர்சனத்தில், அடிப்படை உண்மைகளை அங்கீகரிக்காமல், உண்மையான நல்லிணக்கம் என்பது எப்போதும் சாத்தியமாகாது. இத்தகைய அருவருப்பான செயலை நியாயப்படுத்த சிங்களம் என்ற பதமும் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை என கூறுவது, தமிழர்கள் எதிர்கொண்ட துன்பம் நிறைந்த வரலாற்றை கேலிக்கூத்தாக்குவதாகும். அதேவேளை, குற்றவாளியை பாதிக்கப்பட்டவர்களுடன் சமநிலையில் வைத்திருக்கும் ஒரு முயற்சியாகும்.
குறித்த பிரகடனத்தை ஒரு உடன்படிக்கை அல்ல என CTCதவறாக வகைப்படுத்துகிறது. எனினும், இந்தப் பிரகடனம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலை, தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அநீதிகளைத் முற்றாக மறைத்து, நல்லிணக்கத்தை வெறும் வார்த்தை பிரயோகமாக மாத்திரமே வைத்திருக்கும்.
போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவை CTC சந்தித்ததோடு அவருடன் ஒளிப்படமும் எடுத்துக்கொண்டது. கனேடிய அரசாங்கம் மஹிந்த ராஜபக்சவுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், CTC, தடையை பொருளாதார தடையாக மட்டுமே வகைப்படுத்துகிறது. இது போன்ற தடைகளின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவோ அல்லது கண்டுகொள்ளவோ இயலாத நிலையில் CTC தனது பார்வைப்புலனை இழந்துள்ளது. இந்தத் தடை பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்; இருப்பினும், அத்தகைய தடைகளின் நோக்கங்கள் எப்போதும் முற்றிலும் அரசியல் சார்ந்தவையே. இந்தத் தடையை வெறுமனே பொருளாதாரத்துடன் தொடர்புடையது என வகைப்படுத்துவது கபடத்தனமானதும், பயங்கரமானதுமாகும்.
புதிய உறுப்பினர்களின் இணைப்புக்கான கோரிக்கைகளை CTC தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.தற்போது, உறுப்பினர் இணைப்பு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர் இணைப்புக் குறித்த முடிவுகள், முற்றிலும் தன்னிச்சையானவையாக உள்ளது. இது எந்தவிதமான ஜனநாயக கோட்பாடுகள், பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி அல்லது வெளிப்படைத்தன்மையற்ற ஒரு முறையாகும். தமது முடிவுகள் உறுப்பினர்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டவை என்பதை CTC தொடர்ந்துவலியுறுத்துகிறது. இருப்பினும், உறுப்பினர் அனுமதி என்பது, தமக்கு இணக்கமான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தெரிவு செய்யப்பட்ட தனிநபர்களுக்கானது என்ற நிலை அவமானகரமானதும், அபாயகரமானதும் ஆகும்.
இந்த அணுகுமுறை சுதந்திரமாகக் கருத்துக்கூற முடியாமை மற்றும் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி, தமிழர்களைத் தோல்வியுறச் செய்கிறது. இத்தகைய அநீதியை எதிர்க்கும் ஊடகவியலாளர் அல்லது சமூக உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு சட்டத்தை CTC தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இது பேச்சு சுதந்திரம் மற்றும் பொதுப் பங்கேற்பை மௌனமாக்கும் ஒரு நகர்வாகும்.
இறுதியாக, தமிழர்களுக்கு எதிராக எந்த விதமான இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்பதை CTC தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள தமிழர்கள் நிராகரித்துக் கண்டிக்கும் ஒரு நிலைப்பாடாகும். CTC யின் தொடரும் இனப்படுகொலை மறுப்பும், அதனை நியாயப்படுத்துதலும், பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அவமானப்படுத்துவதாகும். நடைபெற்ற இனப்படுகொலை என்பது தமிழர்களை மீள முடியாத துயரில் தொடர்ந்தும் வைத்துள்ளது.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் CTC இதனை மறுப்பது, இந்தத் துயரையும் அழிவையும் தொடர ஏதுவாக்குகிறது. அத்தகைய ஒரு நிலைப்பாடு,
இழந்த உயிர்களைப் பெரிதும் அவமதிப்பதோடு, அவர்களின் சாம்பல்களையும், கல்லறைகளையும் இழிவுபடுத்துவதற்குச் சமமானதாகும்.
இந்தத் தருணத்தில், ஈழத் தமிழர்கள் அல்லது கனேடியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவோ, அல்லது “தமிழர்களின் குரல்” எனத் தம்மைப் பகிரங்கமாக அடையாளப்படுத்தவோ, தார்மீக மற்றும் அதிகாரத்தை CTC இழக்கிறது.
எனவே, CTC கண்டிப்பாக:
* பிரகடனத்தில் இருந்து பகிரங்கமாக விலக வேண்டும். இது போன்ற நிலை மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்த மாபெரும் தவறுக்கு வழிவகுத்த முடிவெடுக்கும் செயல்முறையை வெளிப்படுத்துவதுடன், ஈழத் தமிழர்களிடமும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடமும் நேரடியாக மன்னிப்புக் கோரவேண்டும்.
கூட்டின் மக்கள் சந்திப்பு நடைபெற்ற மார்ச் 23, 2024 அன்று வெளியான CTC இன் அறிக்கை எந்த தவறுக்கும் பொறுப்பேற்கவில்லை. மாறாக, அது பிரகடனத்தில் இருந்து CTC யை விலத்தி வைக்க முயற்சிக்கிறது. அல்லது தனக்கான பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கிறது. பிரகடனம் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு மீள முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், CTC யின் இந்த நிலைப்பாடு பொறுப்பானதோ அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல.
நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் அர்த்தமுள்ள ஈடுபாட்டுடன் ஈழத் தமிழர்கள் மற்றும் கனேடியத் தமிழர்களுக்கான அரசியல் பரப்புரைகளை முன்னெடுப்பதுடன்;
* கனேடியத் தமிழர்களின் உண்மையான ஆணையை பெற்று, அவசியமான சீர்திருத்தம் நிகழும் வரை CTC அமைப்பானது, கனடா, அமெரிக்கா, இலங்கை அல்லது வேறு எந்த நாடுகளுடனோ அல்லது அவற்றின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடனோ அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வேண்டும். இலங்கை மற்றும் பிற அரச அதிகாரிகளுடன் கனேடியத் தமிழர்களின் கருத்துக்கள் பெறப்படாமல் அல்லது அவர்களின் ஆணை எதுவுமின்றி, வரலாற்று ரீதியாக வெளிப்படைத்தன்மையற்ற பல சந்திப்புகளை CTC நடத்தியுள்ளது. அத்தகைய ஒரு அணுகுமுறை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதியாக, CTC தன் மீதான நம்பிக்கையை பெருமளவு இழந்துள்ளதை கருத்தில் கொண்டு, ஈழத் தமிழர்கள் மற்றும் கனேடியத் தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க உதவும் முகமாக, ஏப்ரல் 18, 2024க்குள் சமூக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிரந்தர நிலைக்குழுவை நிறுவுவதற்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிரந்தர நிலைக்குழுவை நிறுவுவதற்கான செயல்முறையை CTC ஆரம்பிக்க வேண்டும் என ‘கூட்டு’ அழைப்பு விடுகிறது.என்றுள்ளது.