பாடசாலையில் கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவன் சாவு..! அதிபருக்கு இடமாற்றம்…!

மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது நீதவான் நால்வரையும் எதிர்வரும்  19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை,  ஹட்டன் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் நேற்றையதினம்(05) குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோரும் ஒன்றுகூடினர்.

அதேவேளை மாணவன் இறப்புக்கு அதிபருக்கும் பங்கு உண்டு என்பதை வற்புறுத்திய பெற்றோர்கள், பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிபரை இடமாற்றம் செய்து பிரதி அதிபரை தற்காலிக அதிபராக நியமித்தனர்.

கொங்கிரீட்  குழாய்கள் பாடசாலை வளாகத்தில் போடப்பட்ட போது அப்போதைய அதிபர் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காத காரணமாக இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என பெற்றோர்கள், அதிகாரிகளிடம் எடுத்து கூறியதை தொடர்ந்து பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை,  ஹட்டன் பதில் நீதவான் திருமதி தமயந்தி பெர்னான்டோ மாணவன் படுகாயம் அடைந்த இடத்தை பார்வையிட்டதுடன்,  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று மாணவனின் உடலத்தை பார்வை இட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு இன்று காலை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளபட்ட பின்னர் இறந்த மாணவனின் உடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *