திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் காணி ஆவணங்கள் இல்லாத 571 பேருக்கான காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (6) காலை குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரினால் குறித்த ஆவணங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 571 பேருக்கு மேட்டுக் காணிகளுக்கான காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் 435 பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களும் (பேமிட்), 136 பேருக்கு அளிப்பு பத்திரங்களும் (கிரான்ட்) வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, முதன்முறையாக இலத்திரனியல் அனுமதிப்பத்திர அடையாள அட்டையும் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த அட்டையானது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணிகளின் உரிமையாளரின் விபரம், காணி அனுமதிப்பத்திர இலக்கம், காணியின் அமைவிடம், காணியின் எல்லைகள் மற்றும் காணி தொடர்பான ஆவணங்கள் என்பவற்றையும், நிற்கும் இடத்தில் இருந்து காணியை சென்றடைவதற்கான பாதை விபரங்களையும் உள்ளடக்கியதாக இந்த இலத்திரனியல் அனுமதிப் பத்திர அடையாள காணப்படுவதாகவும் காணிப் பிணக்குகளை ஆராய்ந்து விரைவான தீர்வினை வழங்குவதற்காக இந்த இலத்திரனியல் அனுமதிப் பத்திர அடையாள அட்டையை (epic) முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளதாக பிரதேச செயலாளர் கே.குணநாதன் தெரிவித்தார்.