பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தனது கள்ளக்காதலனுடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்தக் கொலையை செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக சந்தேநபர் தெரிவித்துள்ளதுடன், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய மன்னா கத்தி பிரிவென வீதியில் உள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கடந்த 2ஆம் திகதி இரவு இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.