போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர்.
அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.
தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.