ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்தும் சில தமிழ் அரசியல் தரப்பினரது செயற்பாடுகள் தேவையற்ற ஒன்றாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டினது சமகால அரசியல் சூழலுக்கேற்ற வகையில் குறித்த ஒரு தரப்பினர் அல்லது தரப்பு வெற்றிபெறும் வேட்பாளராக இருப்பார் என தெரிந்திருந்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி அபேட்சகரையே இன்று வரை தமிழர் தரப்பிலிருந்து ஆதரிக்கப்பட்டுவரும் துர்ப்பாக்கியமான வரலாறு இருந்து வருகின்றது.
அதாவது, தமிழ் மக்களுக்கும் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகவுள்ளவருக்கும் இடையே புரிந்துணர்வு அற்றவகையில், அல்லது நேரடியாக சென்று தமிழ் மக்களின் தேவைகளை பேரம்பேசி பெற்றுக்கொள்ள இயலாதவகையில் தமது சுயநல அரசியலை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினரால் என்றுமே தமிழ் மக்கள் நன்மைகளை பெற்றுக்கொண்டது கிடையாது.
ஆனால், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஏதாவதொரு காரணத்தை கூறி தமது தெரிவு இவர்தான், இவரை ஆதரியுங்கள் என்று கூறி தமிழ் மக்களை ஆதரிக்குமாறு திசைதிருப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரவுள்ள ஜனாதிபதி தேர்’தலில் யாரை ஆதரிப்பது என்ற நிலை மாறி தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவுசெய்து நிறுத்துவது தொடர்பில் சில தமிழ் கட்சிகள் முனைகின்றனர்.
இதேநேரம் சிலர் பொது வேட்பாளர் தேவையற்றது என கூறுகின்றனர்.
ஆனால் சிலர் சுயநலன்களுக்காக தமி்ழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பதனூடாக தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இல்லாது செய்து பிரச்சினைகளை நீடித்த பிரச்சினையாக வைத்துக்கொள்வதற்கே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாறாக இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, அல்லது கூட வந்த குரங்கு ஆண்டால் என்ன என்றிராது நாங்கள் ஜனநாயக ரீதியில் நாட்டின் தலைமையை தெரிவு செய்வதனூடாக எமது அரசியலுரிமையை பேசுவதற்கான முகாந்தரத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.
அதேநேரம், நாட்டிலுள்ள அரசியல் முறைமையில் தமிழர் தரப்பால் ஜனாதிபதியாக தெரிவாகக் கூடிய அல்லது வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றே கூறலாம்.
எனவே, இந்த தமிழ் தரப்பினரின் பொது வேட்பாளர் தெரிவென்பது தேவையற்ற ஒன்றாக இருப்பதுடன் அதனை முன்வைப்பதும் பயனற்றதாகவே இருக்கும்.
மாறாக தமிழ் மக்கள் பேரம்பேசி தமது வாக்குகளை வெற்றி பெறக் கூடிய தரப்புக்கு வழங்கி அவரை ஆதரித்தால் நிச்சயமாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கம் என்பதே எமது நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.