இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு..!

நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் கீழ் உள்ள 22 கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கை அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல்கள் முடிவு எட்டப்படாது இழுபறி நிலையில் காணப்பட்டது.

கடந்த 8ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட பதில் அரசாங்கதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிகளுடனான கலந்துரையாடலையடுத்து சுழற்சி முறையில் 15560 ஏக்கர் செய்கை பண்ணுவதாக தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சுழற்சி முறை வேண்டாம் என தெரிவித்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்டது. 

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. பல மணி நேர கலந்துரையாடலின் பின்பு சுழற்சி முறையை தவிர்த்து பங்கீட்டு முறையில் வழமை போன்று செய்கை மேற்கொள்வதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *