கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சனை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்பதாக 500 போலியான அனுமதிப் பத்திரங்களுடன் 600 ஏக்கருக்கு மேலான வயல் நிலங்களை கையகப்படுத்தியுள்ள 15 நபர்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர்களிடமிருந்து இக்காணிகளை மீட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றுவதை பிரதான இலக்காக கொண்டு அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேரடி விஜயம் மேற்கொண்டு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கேட்டறியப்பட்டது.
அதன்படி, தொடர்ந்தும் நாம் எடுத்த முயற்சியின் பலனாக குறித்த காணிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீர் வாய்க்கால் அடைக்கப்பட்டது.
இதேவேளை வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குறித்த விடயம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிப்படைத்தன்மையுடன் மாவட்டத்தின் துறைசார் அதிகாரிகள் இருப்பார்கள் என்று கால்நடை வளர்ப்பாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை வீண்போகாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.