பிரபாகரனுக்கு பின் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை! காணவும் முடியாது! சாள்ஸ் எம்.பி. அதிரடிக் கருத்து

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழரசு கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து  கலந்தாலோசிக்கவில்லை.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவருகின்றன.

என்னை பொருத்தமட்டில் அவர்கள் கூறுவதன் பிரதான காரணம் தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தாலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாகவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தேர்தலில்  நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.

எனது தனிப்பட்ட கருத்தின் படி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம். 

வடக்கு கிழக்கு மலையகம், கொழும்பை பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. காணவும் முடியாது.

எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கட்சித் தலைவர் அல்லது பொதுவானவர்களையோ அடையாளம் காண்பது என்பது கடினமான விடயம். 

குறிப்பாக தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்திற்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *